• Thu. Nov 21st, 2024

உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்ட இந்திய சிங்கப் பெண்

Mar 15, 2022

வீட்டை மட்டும் அல்ல பல நாட்டு எல்லைகளையும் கடந்து சுதந்திர பறவைகளாக பெண்கள் பறக்க தொடங்கி விட்டனர்.

இப்படி சுதந்திர பறவையாக பறந்து உயரம் தொட்டு இருக்கும் 24 வயதே ஆன பெண் விமானி தான் மஹாஸ்வேதா சக்கரவர்த்தி. இவர் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.

உக்ரைனில் சிக்கி தவித்து வந்த இந்திய மாணவர்களை மீட்க உடனடியாக ஆப்ரேஷன் கங்காவில் கலந்து கொள்ளுமாறு நள்ளிரவில் அழைப்பு வரவே, பெற்றோருக்கு கூட தெரிவிக்காமல் உடண்டியாக மஹாஸ்வேதா போலந்து விரைந்ததாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கி மார்ச் 7-ந் தேதி வரை 4 முறை போலந்தில் இருந்து, 2 முறை ஹங்கேரியில் இருந்தும் சுமார் 800 மாணவர்களை மஹாஸ்வேதா பத்திரமாக மீட்டு கொண்டுவந்துள்ளார்.

போர் பதற்றத்தால் திக்குமுக்காடி கொண்டிருந்தவர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்ததால் இன்று இந்தியர்களின் அனைவரின் இதயத்திலும் கதாநாயகியாக மஹாஸ்வேதா இடம்பிடித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் இருந்து 800 பேரை இந்தியாவிற்கு அழைத்து வந்த பெண் விமானியான மகாஸ்வேதா சக்கரவர்த்திக்கு சமூக வலைத் தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கடந்த 4 ஆண்டுகளாக விமானியாக பணிபுரிந்து வரும் மஹாஸ்வேதா கொரோனா காலக்கட்டத்திலும் இந்திய மக்களை காக்க வெவ்வேறு நாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களையும், மருத்துவ உபகரணங்களையும் பெற்றுக்கொண்டு வந்தவர் இவர்.

இதுபற்றி மகாஸ்வேதா கூறுகையில்,
” இது ஒரு வாழ்நாள் அனுபவமாகும். இளம் மாணவர்கள் அதிர்ச்சியுடனும் சிலர் நோய்வாய்ப்பட்டும் இருந்தனர். ஆனால், அவர்களின் மன உறுதிக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதற்காக நான் மிகுந்த பெருமையடைகிறேன்” என்றார்.