ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் சிறையிலிருந்து பிணையில் செவ்வாய்க்கிழமை வந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் சிகிச்சைக்காக தற்போது ஜோலார்பேட்டை பகுதியில் தன்னுடைய சொந்த வீட்டில் கடந்த 9 மாதங்களாக பரோலில் உள்ளார்.
இதனிடையே, உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 9 ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கியது. பிணை உத்தரவு நகலைப் பெற பேரறிவாளன் கடந்த 9 ஆம் திகதி புழல் சிறைக்குச் சென்றார். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் பிணை உத்தரவு சிறை அலுவலகத்துக்கு கிடைக்காத காரணத்தினால், அவர் மீண்டும் ஜோலார்பேட்டையிலுள்ள வீட்டுக்குத் திரும்பினார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் பிணை உத்தரவு நகலைப் பெற்று பேரறிவாளன் இன்று புழல் சிறையிலிருந்து வந்தார்.
இதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், நீதிக்கான இந்தப் போராட்டத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அவர் மேலும் பேசியதாவது: 31 ஆண்டுகால நீதிக்கான போராட்டத்தில் இது மிக முக்கியமான கட்டம். பிணை என்பது இடைக்கால நிவாரணம்தான். இந்த வழக்கில் எனது மகன் மற்றும் இதர சிறைவாசிகள் அனைவரும் சிறையிலிருந்து விடுதலையாகும் வரை எனது போராட்டமானது உங்கள் ஆதரவுடன் தொடரும். முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை நின்ற அனைவருக்கும் நன்றி.
இந்த இடத்தில் செங்கொடியை நினைவுகூர விரும்புகிறேன். தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர். ஊடகங்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.