நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24ந்தேதி படையெடுப்பில் ஈடுபட்டது.
போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. தொடர்ந்து ரஷியாவை வலியுறுத்தியும் வருகின்றன. எனினும், போரை கைவிட ரஷியா மறுத்து விட்டது. இதனால், ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து உள்ளன.
உக்ரைன் மீது போர் தொடுக்கவில்லை. நாங்கள் மேற்கொள்வது, ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார். உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. உக்ரைனின் நாசிச நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்றும் ரஷியா தெரிவித்தது.
தொடர்ந்து 25 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வரும் இந்த போரில், குடிமக்களில் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 1,400க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்து உள்ளது. இரு தரப்பிலும் ராணுவ வீரர்களும் உயிரிழந்து உள்ளனர்.
உக்ரைனும், தனியாளாக போரை எதிர்கொண்டு வருகிறது. தொடக்கத்தில் நேட்டோ நாடுகள் தங்களது படைகளை ரஷியாவுக்கு எதிராக களமிறக்கலாம் என கூறப்பட்டது. நேட்டோவில் உறுப்பினராக உள்ள நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால் மற்ற உறுப்பினர் நாடுகள் ஆதரவு கரம் நீட்டும்.
ஆனால், நேட்டோவில் உறுப்பினர் அல்லாத நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் போரில் நேரடியாக களமிறங்கவில்லை. இதனால், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டு உள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள நாடுகளில் சில ஆயுதங்களை வழங்கி வருகின்றன என்றும் கூறப்படுகிறது. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷியாவுடனான போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளார்.
எனினும், அடுத்தடுத்து நடந்த 2 சுற்று பேச்சுவார்த்தைகளில் போர் நிறுத்த முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், தி கீவ் இன்டிபென்டண்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் நாட்டின் சஸ்பில்னே என்ற பொது ஊடகம் ஒன்றிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டியில், நேட்டோ அமைப்பு, ஒன்று எங்களை ஏற்று கொண்டுள்ளோம் என்று கூற வேண்டும்.
அல்லது எங்களை ஏற்று கொள்ளவில்லை என வெளிப்படையாக கூற வேண்டும். ஏனெனில், ரஷியாவை கண்டு உண்மையில் நேட்டோ அமைப்பினர் அச்சப்படுகின்றனர் என கூறியுள்ளார் என்று தெரிவித்து உள்ளது.