• Mon. Nov 18th, 2024

வரலாற்றில் இன்று மார்ச் 30

Mar 30, 2022

மார்ச் 30 கிரிகோரியன் ஆண்டின் 89 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 90 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 276 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

598 – பால்க்கன் நடவடிக்கை: ஆவார் நாடோடிக் குழு பைசாந்தியப் பேரரசின் முக்கிய நகரமான தோமிசு மீதான முற்றுகையை நிறுத்தினர். அவார்-சிலாவிக் நாடோடிக் குழுக்கள் கொள்ளை நோயினால் பெருமளவில் அழிந்ததைத் தொடர்ந்து அவர்களது தலைவர் முதலாம் பயான் தன்யூப் ஆற்றின் வடக்கே பின்வாங்கினார்.

1296 – இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான சண்டையில், இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்டு பெரிக் நகரை சூறையாடினார்.

1699 – குரு கோவிந்த் சிங் பஞ்சாபின், அனந்த்பூர் சாகிப் நகரில் கால்சா அமைப்பைத் தோற்றுவித்தார்.

1818 – இயற்பியலாளர் அகசுடீன் பிரெனெல் ஒளியியல் சுழற்சி பற்றிய தனது குறிப்புகளை பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் படித்தார்.

1822 – ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா பிராந்தியம் உருவாக்கப்பட்டது.

1831 – யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிசன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.

1842 – அறுவைச் சிகிச்சைகளில் முதன்முதலாக ஈதர் மயக்க மருந்து குரோபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.

1851 – ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

1856 – கிரிமியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பாரிசு உடன்பாடு எட்டப்பட்டது.

1858 – அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஐமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது.

1861 – சேர் வில்லியம் குரூக்சு தாலியம் தனிமத்தைக் கண்டுபிடித்தார்.

1863 – டென்மார்க்கு இளவரசர் வில்லெம் கியோர்க் கிரேக்கத்தின் ஜார்ஜ் மன்னராக முடிசூடினார்.

1867 – அலாஸ்கா மாநிலத்தை 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²) என்ற கணக்கில் 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, உருசியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா கொள்வனவு செய்தது.

1912 – மொரோக்கோ பிரான்சின் பாதுகாப்பில் உள்ள ஒரு நாடாக அறிவிக்கப்பட்டது.

1940 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: புதிய சீன பொம்மை அரசின் தலைநகராக நான்கிங் நகரை சப்பான் அறிவித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: நேசப் படைகள் பல்காரியா தலைநகர் சோபியா மீது பெரும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டன.

1944 – இரண்டாம் உலகப் போர்: நியூரம்பெர்க் நகரைத் தாக்க அனுப்பப்பட்ட பிரித்தானியாவின் 795 போர் வானூர்திகளில் 95 வானூர்திகள் திரும்பவில்லை.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனைப் படை ஆஸ்திரியாவின் வியன்னா நகரைக் கைப்பற்றியது; போலந்து, செஞ்சேனைப் படைகள் இணைந்து தான்சிக்கைக் கைப்பற்றின.

1949 – பனிப்போர்: ஐசுலாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தது. இதற்கு எதிரான கலவரம் ரெய்க்யவிக் நகரில் இடம்பெற்றது.

1965 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கத் தூதராலயத்திற்கு முன்னால் தானுந்துக் குண்டொன்று வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

1972 – வியட்நாம் போர்: வடக்கு வியட்நாம் படைகள் தெற்கு வியட்நாமின் பாதுகாப்பு வலயத்தினுள் சென்றதை அடுத்து அங்கு போர் மூண்டது.

1979 – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எய்ரி நீவ் என்பவர் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இருந்து வெளியேறும் போது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். ஐரிய தேசிய விடுதலை இராணுவம் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

1981 – அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் வாசிங்டனில் உணவு விடுதி ஒன்றில் வைத்து ஜோன் இங்கிளி என்பவனால் மார்பில் சுடப்பட்டார். மேலும் மூவர் காயமடைந்தனர்.

1982 – கொலம்பியா விண்ணோடம் நியூ மெக்சிகோவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.