• Wed. Sep 4th, 2024

இலங்கை அதிபர் பதவி விலக வேண்டும் – வலுவான போராட்டம்

Apr 1, 2022

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அவரது இல்லம் முன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் நுகேகொட காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறீலங்காவில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வாகன எரிபொருள் உயர்வு, உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை, எரிவாயு உருளையின் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என அனைத்துமே வரலாறு காணாத விலையில் விற்கப்படுவதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஒரு வேளை உணவிற்கே மக்கள் கையேந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்த பொருளாதார நெருக்கடியால், கோட்டாபய ராஜபக்ஷ அரசு பதவி விலக வேண்டுமென அனைத்து மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இலங்கை அரசு தற்போது அந்நிய நாட்டு உதவிகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்நாட்டு மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் அதிபருக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ இல்லம் அமைந்துள்ள நுகேகொட மிரிஹானயில் திரண்ட பொதுமக்கள், அதிபருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபர் இல்லத்திற்கு செல்லும் சாலையை மறித்த அவர்களை, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசயும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விரட்டினர். இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள், காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் நுகேகொட காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.