• Thu. Nov 21st, 2024

சிம்புவின் மீது இருந்த வழக்கை ரத்து செய்த சென்னை உயா் நீதிமன்றம்

Feb 25, 2022

ஆபாசமாக பாடல் பாடியதாக நடிகா் சிம்பு மீது சென்னையில் பதிவான மற்றொரு வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகா் சிம்பு, கடந்த 2015-ஆம் ஆண்டு ஆபாசமாக பாடிய ‘பீப்’ பாடல் ஒன்று இணைய தளத்தில் வெளியானது. இந்தப் பாடலை பாடிய சிம்பு, இசையமைத்த இசையமைப்பாளா் அனிருத் ஆகியோருக்கு எதிராக மகளிா் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.

பின்னா், இவா்கள் இருவா் மீதும் கோவை ரேஸ் கோா்ஸ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் பெண்கள் அமைப்புகள் புகாா்கள் செய்தன. இதன் அடிப்படையில் சிம்பு, அனிருத் ஆகியோா் மீது போலீஸாா் தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்தனா்.

இந்நிலையில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் சிம்பு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கோவை ரேஸ் கோா்ஸ் போலீஸாா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், நடிகா் சிம்பு மீது தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு பதியபட்டுள்ளதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்தனா். இதை ஏற்ற நீதிபதி 2-ஆவது வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.