டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியிடப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 23ஆம் திகதி தொடங்கி அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது.
இந்திய அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாடலை இளம் பாடகி அனன்யா பாடியுள்ளார். அனன்யா, நிர்மிகா சிங், சிஷிர் சமந்த் ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர்.
‘இந்துஸ்தான் வே’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை வெளியிட்ட தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனன்யா பிர்லாவின் இந்த முயற்சிக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
ஒன்றிணைந்து பணிபுரிவதற்கு கடினமான கொரோனா காலகட்டத்தில், உணர்ச்சி ததும்பும் பாடலை ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒலிம்பிக்கில் இந்தியாவிக்காக பதக்கம் வென்ற லியாண்டர் பெயஸ், மேரி கோம், விஜேந்தர் சிங், பிவி சிந்து, சாக்ஷி மாலிக், அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளில் வெற்றி நிகழ்வுகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.