ஸ்பைடர் மேன் – நோ வே ஹோம் திரைப்படம் 2018 இல் வெளியான அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் முதல்நாள் இந்திய வசூலை முறியடித்துள்ளது.
இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் முதல்நாள் வசூலில் 2018 இல் வெளியான அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் 31.30 கோடிகளுடன் இரண்டாவது இடத்திலும், 2019 இல் வெளியான அவென்ஜர்ஸ் என்ட்கேம் 53.10 கோடிகளுடன் முதலிடத்திலும் இருந்தன.
நேற்று வெளியான ஸ்பைடர் மேன் – நோ வே ஹோம் இந்தப் படங்களின் வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேநேரம், அவென்ஜர்ஸ் திரைப்படங்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு முன் வெளியானவை. ஸ்பைடர் மேன் கொரோனா இரண்டாம் அலைக்குப் பின்.
ரசிகர்கள் இன்னும் முழுமையாக பயம் நீங்கி திரையரங்குகளுக்கு வர ஆரம்பிக்கவில்லை. மகாராஷ்டிரா திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இத்தனை தடைகளை கடந்து ஸ்பைடர் மேன் – நோ வே ஹோம் நேற்று ஒருநாளில் 41.50 கோடிகளை வசூலித்துள்ளது. இது கிராஸ் கலெக்ஷன். அதாவது வரிகளும் சேர்த்து. வரிகள் போக நெட் கலெக்ஷன் 32.67 கோடிகள்.
அதாவது அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் முதல்நாள் வசூல் 31.30 கோடிகளைவிட அதிகம்.
இந்த வருடம் வெளியான ஹாலிவுட் படங்களில் எட்டர்னல்ஸ் 19 கோடிகளை வசூலித்ததே அதிகபட்ச முதல்நாள் கலெக்ஷனாக இருந்தது. அதனை ஸ்பைடர் மேன் முறியடித்துள்ளது.