• Wed. Jul 24th, 2024

முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா!

Jul 14, 2021

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குவது என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் முதல் கொரோனா நோயாளியான கேரளாவை சேர்ந்த மாணவிக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு, ஜனவரி 30ஆம் தேதி, சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று இருந்தது.

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவியான அவருக்கு ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

“டெல்லி செல்வதற்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். ஆன்டிஜன் சோதனையில் தொற்று இல்லை என்றும் ஆர்டி பிசிஆர் சோதனையில் தொற்று உறுதி என்றும் வந்துள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. தற்போது, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என்றார்.

இதுகுறித்து திருச்சூர் மாவட்ட மருத்துவ அலுவலர் ரீனா கூறுகையில், “கரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. எனவே, அச்சப்பட தேவை இல்லை. இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுவும் அதுபோல இருக்கலாம். நாங்கள் அவரை தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்” என்றார்.

இந்நிலையில் குறித்த மாணவிக்கு இன்னமும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.