
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறார்களிற்கு எந்தவித முன் அறிகுறிகளும் இல்லாமல், அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, திடீரென ஒட்சிசன் அளவு குறைய நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் நலின் கிதுல்வத்த இதனை தெரிவித்தார்.
சுவாசக் கஷ்டம் அல்லது பேசவோ நடக்கவோ இயலாமை போன்ற எந்த முன் அறிகுறிகளும் இல்லாமல், எதிர்பாராத விதமாக ஒட்சிசன் அளவு குறைவதாக தெரிவித்தார்.
ஓடுதல் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது, குழந்தையின் இயல்பான நிலையில் இருந்து ஒட்சிசன் அளவு குறைகிறது. இது சைலண்ட் ஹைபொக்ஸியா என்று குறிப்பிடப்படுகிறது.
எனவே, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குழந்தையின் ஒட்சிசன் அளவை கண்காணிக்க அவர் பெற்றோருக்கு அறிவுறுத்தினார்.
ஒரு சிறு செயல்பாட்டிற்குப் பிறகு குழந்தையின் ஒட்சிசன் அளவு 94 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால் அல்லது ஓய்வெடுக்கும்போது ஒட்சிசன் அளவு 96 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால், உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது முக்கியம் என்று வைத்தியர் கிதுல்வத்த கூறினார்.
மேலும், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஆறு படுக்கைகளிலும் கொரோனா தொற்றிற்குள்ளான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.