• Thu. Jul 25th, 2024

கட்டுப்பாடுகளை அதிகரித்த ஜேர்மனி

Nov 4, 2021

ஜேர்மனியில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, ஜேர்மன் மாகாணங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. புதன்கிழமை முதல், Baden-Württemberg கொரோனா விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளதோடு, சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி 284 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கு பின்பற்றப்படும் விதிமுறைகளின்படி புதிய விதிகள் தாமாகவே அமுலுக்குவந்துவிடும்.

Robert Koch நிறுவன தரவுகளின்படி Baden-Württemberg மாகாணத்தில் 7 நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்ற எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 167.5 ஆக உள்ளதுடன், அம்மாகாணத்தில், நேற்று (03) மட்டும் புதிதாக 1,683 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.

தடுப்பூசி பெறாதவர்களில் 100,000 பேருக்கு 40 பேரும், தடுப்பூசி பெற்றவர்களில் 100,000 பேருக்கு 7 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.

Baden-Württemburg மட்டுமின்றி, பவேரியா மற்றும் சாக்ஸனி உட்பட பல மாகாணங்கள் இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் விதிகளை கடுமையாக்க திட்டமிட்டு வருகின்றன.

சாக்ஸனி அரசு, அடுத்த திங்கட்கிழமையிலிருந்து கட்டிடங்களுக்குள் பின்பற்றவேண்டிய சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் முதலான கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்யவும், திறந்தவெளி மைதானங்கள் முதலானவற்றிற்கும் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

பவேரியா, மாகாணம் முழுவதும் தடுப்பூசி பெறாதவர்களை கட்டிடங்களுக்குள் அனுமதிக்கத் தடை விதிப்பது முதலான கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்காக கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

பவேரியாவின் சில பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்று காணப்படும் நிலையில், ஏற்கனவே பல முனிசிபாலிட்டிகள் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திவிட்டன.

பவேரியாவில், 7 நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா என்ற எண்ணிக்கை 228 ஆக உள்ளது. சாக்ஸனியில், 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா என்ற எண்ணிக்கை 289 ஆக உள்ளது.

Hesse மாகாணத்தில் சீக்கிரத்தில் புதிய கட்டுப்பாடுகளை அமைச்சர்கள் அறிவிக்க இருக்கிறார்கள்.

பெர்லின் அதிகாரிகள் அடுத்த செவ்வாயன்று கூடி கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள்.

புதன்கிழமை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், ஜேர்மனியில் புதிதாக 20,398 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், 194 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். மே மாதம் 28ஆம் திகதிக்குப் பிறகு, இதுதான் ஒரு நாளில் அதிக கொரோனா பலி எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.