• Thu. Nov 21st, 2024

19 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன!

Mar 4, 2022

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று காலகட்டத்தில் இயற்கைச் சீற்றம் உள்ளிட்டவற்றில் பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் சுமார் 1.53 லட்சம் குழந்தைகள் இழந்துள்ளனர் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலண்டனிலிருந்து வெளியாகும் “லான்செட்’ மருத்துவ இதழ் ஒன்றில் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றினால் 19 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்து அனாதைகளாகியுள்ளன என்ற தகவலை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் மத்திய மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை, இது தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காலகட்டத்தில் நோய்த்தொற்றால் உயிரிழப்பு அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கைவிடப்பட்ட குழந்தைகளை அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை அறிவுறுத்தியது. இதையொட்டி சிறார் பாதுகாப்பு சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள, தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், இதற்கான கண்காணிப்புகளை மேற்கொண்டு, இந்தத் தகவல்களையும் தரவுகளையும் பதிவு செய்ய, “பால் ஸ்வராஜ்” என்கிற இணைதளத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்று காலகட்டத்தில் கொரோனா நோய் அல்லது இயற்கையாகவோ, இயற்கைக்கு மாறாகக் கூட பெற்றோர்கள் உயிரிழந்திருக்கலாம்.

இந்த விவரங்களையும் பதிவு செய்ய நோய்த் தொற்று கடுமையாக இருந்த கடந்த 2020, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் கண்காணிக்கப்பட்டது.

பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த அனைத்து குழந்தைகளையும் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த வகையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பு, பாதுகாப்பு, உதவிகளை வழங்குவதற்காக இதுவரை, 153,827 குழந்தைகள் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நாடு முழுக்க கடந்த பிப்ரவரி 15 ஆம் திகதி வரை 142,949 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். 10,386 குழந்தைகள் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.

மாநில வாரியாகவும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒடிஸா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. பெற்றோர்களை இழந்த மொத்த குழந்தைகள் 26,318 ஆகும். இதில் 24,697 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளன. இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் 20,429 குழந்தைகள் (ஒரு பெற்றோர் 19,707) மூன்றாவது இடத்தில் குஜராத்தில் மொத்தம் 14, 934 (ஒரு பெற்றோர் 13,724) குழந்தைகள் உள்ளன. எண்ணிக்கையில் அதிக அளவில் நான்காவது மாநிலமாக தமிழகத்தில் பெற்றோரில் ஒருவரை இழந்த 11, 567 குழந்தைகள் உள்பட மொத்தம் 11,908 குழந்தைகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தைகள் எண்ணிக்கை 339 ஆக உள்ளது. இரண்டு பேர் கைவிட்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் பெற்றோரில் ஒருவர் இழந்த 377 குழந்தைகள் உள்பட மொத்தம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 389 ஆக உள்ளது. மேலும், நா டு முழுவதும் பெற்றோர்கள் உயிரிழப்பால் 492 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளனர் என்றும் ஆணைய கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.