ஒமிக்ரோன் மாறுபாடு வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைக்கு முடக்க கட்டுப்பாடுகள் அவசியமில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வடக்கே அண்டை நாடான கனடாவில் ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவுக்குச் சென்ற இரண்டு நோயாளிகளிடம் ஓமிக்ரோன் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று(29) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி, மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு முகக்கவசங்களை அணிந்தால் முடக்கம் அவசியப்படாது என கூறியுள்ளார்.
மேலும் தென்னாபிரிக்காவால் முதலில் அறிவிக்கப்பட்ட ஓமிக்ரோன் மாறுபாடு அமெரிக்காவிலும் அடையாளம் காணப்படும் என்பதனை தவிர்க்க முடியாதது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில், தென்னாபிரிக்கா, போட்ஸ்வானா, சிம்பாப்வே, நமீபியா, லெசோதோ, எஸ்வதினி, மொசாம்பிக் மற்றும் மலாவி ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்கு பயணத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான அமெரிக்கர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.