• Wed. Nov 27th, 2024

ஒமைக்ரானை சாதாரணமானது என்று வகைப்படுத்தப்படக்கூடாது – WHO

Jan 7, 2022

கொரோனா வைரசின் புதியவகை மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா விகாரத்தை விட குறைவான கடுமையான நோயை உருவாக்குவதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த வைரசை “சாதாரணமானது” என்று வகைப்படுத்தப்படக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது நவம்பரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மாறுபாட்டிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைந்துள்ளதாக ஆரம்பகால ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று நிருபர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ மேலாண்மைக்கான தலைவர் ஜேனட் டயஸ் கூறினார்.

மேலும் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் இருவரிடமும் தீவிரத்தன்மை குறைவதற்கான அபாயமும் இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், “டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமைக்ரான் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்களில், இது லேசானது என்று வகைப்படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முந்தைய மாறுபாடுகளைப் போலவே, ஒமைக்ரான் மக்களை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறது மற்றும் மக்களைக் கொல்கிறது” என்று அவர் கூறினார்.