‘பரிசோதனைகள் செய்யப்படாமல், குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால், அது பேரழிவுக்கு வழிவகுத்துவிடும்’ என, டில்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. டில்லி உயர் நீதிமன்றத்தில், ஒரு மைனர் சிறுவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரசின் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே அதற்குள், 12 – 17 வயதுடைய இளம் பருவத்தினருக்கு தடுப்பூசியை உடனடியாக செலுத்த, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கொள்கைகள்இந்த மனு, நீதிபதிகள் படேல் மற்றும் ஜோதி சிங் அடங்கிய அமர்வு முன், நேற்று(16) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
‘நம் நாட்டில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசியின் பரிசோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் அதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு, நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் குழந்தைகளுக்கு செலுத்தப்படும்’ என்றார்.
இதன்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தடுப்பூசி பரிசோதனைகள் முடியட்டும்; பரிசோதனைகளை முறையாக செய்யாமல் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்தினால், அது பேரழிவுக்கு வழிவகுத்துவிடும்.
பரிசோதனைகள் முடிந்தபின் குழந்தைகளுக்கு உடனே செலுத்தப்பட வேண்டும். அதை எதிர்நோக்கியே பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.