• Thu. Nov 21st, 2024

ஜூலை 19 முதல் பிரித்தானியாவில் எதற்கெல்லாம் அனுமதி?

Jul 6, 2021

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூலை மாதம் 19ஆம் திகதி நாடு சகஜ நிலைக்குத் திரும்பும் என அறிவித்துள்ள நிலையில், ஜூலை 19 அன்று என்னென்னெ கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன, என்னென்ன கட்டுப்பாடுகள் தொடர இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.

ஜூலை 19க்குப் பிறகும் என்னென்ன கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன?

ஆறு பேர் கூடும் விதி நீக்கம்

மக்கள் வீடுகளுக்குள் சந்தித்துக்கொள்ள எண்ணிக்கை வரையறை இல்லை. அதாவது, முன்பு ஒரு இடத்தில் ஆறு பேர் மட்டுமே கூடலாம், இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சந்தித்துக்கொள்ளலாம் என்று இருந்த நிலை மாறி, எத்தனை பேர் வேண்டுமானாலும் சந்தித்துக்கொள்ளலாம். வெளியிடங்களிலும் அவ்வாறே எத்தனை பேர் வேண்டுமானாலும் கூடி சந்தித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட உள்ளது.

திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளில் கூட எண்ணிக்கை வரையறை நீக்கம்

திருமணம், இறுதிச்சடங்குகள் போன்ற பெரிய குடும்ப நிகழ்வுகளில் இத்தனை பேர்தான் கூடவேண்டும் என்றிருந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் விளையாட்டு அரங்கங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்

இனி, இசை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டி முதலான கலை நிகழ்ச்சிகளில் எத்தனை பேர் கூடுவது என்பது குறித்து எந்த கட்டுப்பாடும் கிடையாது. அதாவது, தியேட்டர்களும், விளையாட்டுத்திடல்களும் எத்தனை பேர் அதிகபட்சம் பங்கேற்க முடியுமோ அத்தனை பேருடன் இயங்கலாம்.

இரவு விடுதிகள்

கொரோனா தொற்று ஆரம்பித்ததற்குப் பின் முதன்முறையாக இரவு விடுதிகள் முதலானவை இயங்க தடை நீக்கப்படுகிறது.

பாடுவதற்கு தடை நீக்கம்

தேவாலயங்கள் முதலான இடங்களில் பாடல்கள் பாட தடையோ கட்டுப்பாடுகளோ இனி இல்லை.

ஜூலை 19க்குப் பிறகும் என்னென்ன கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்?

தொற்றுடையோருடன் தொடர்பிலிருந்தோரை கண்காணிப்பில் வைத்தல் (CONTACT TRACING) கொரோனா தொற்றியவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்காணித்தல் நிறுத்தப்படாது.

எதிர்காலத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டால், அதை கையாள இது உதவியாக இருக்கும் என போரிஸ் ஜான்சன் கருதுகிறார். இதன் பொருள் என்னவென்றால், யாரேனும் கொரோனா தொற்றியவர்களுடன் தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரிப்பது நிறுத்தப்படாது, அது தொடரும் என்பதாகும்.

பெரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவோரை, அவர்களுக்கு கொரோனா உள்ளதா என்பது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சோதிக்க விரும்பினால், இந்த கட்டுப்பாடு அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்.

ஜூலை 19க்குப் பிறகும் தொடரும் நெறிமுறைகள் (சட்டம் அல்ல)

மாஸ்க் அணிவது கட்டாயம் அல்ல என அறிவிக்கப்பட உள்ளது. ஆனால், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், கொரோனா அதிகம் பரவும் இடங்கள் போன்ற இடங்களில் மாஸ்க் அணிய பரிந்துரைக்கப்படும்.

சுரங்க ரயில் மற்றும் விமானங்களில் மாஸ்க் அணியவேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இரவு விடுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள், ஒரு மீற்றர் சமூக இடைவெளி, வீட்டிலிருந்தவண்ணம் வேலை, முதியோர் இல்லங்களில் இருப்போரைக் காண எத்தனை பேர் செல்வது என்ற கட்டுப்பாடு, கொரோனா பாஸ்போர்ட், போன்றவை கட்டாயம் அல்ல, ஆனால், அந்த கட்டுப்பாடுகளை தொடர்வதா இல்லையா என்பதை அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

இன்னமும் முடிவு செய்யப்படாத விடயங்கள் என்னென்ன?

வெளிநாட்டுப்பயணம், சுய தனிமைப்படுத்தல், பள்ளிகள் தொடர்பான விடயங்கள் ஆகியவை இனிமேல்தான் முடிவு செய்யப்பட உள்ளன.

இதற்கிடையில் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டாலும், மக்கள் கவனமாக இல்லையென்றால், இந்த சுதந்திரம் இன்னும் சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என அரசின் அறிவியல் ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.