கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒமைக்ரான் என்ற புதிய மாறுபாடு தோன்றி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியின் செயல்திறன் மீதும் கேள்வியை எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் பைசர் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா ஆகிய 2 தடுப்பூசிகளும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக குறைவான செயல் திறனை கொண்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை விட நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் நோய் எதிர்ப்பு மண்டலம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதற்கு ஊட்டச்சத்து முக்கியமானது. உடலில் போதுமான அளவு இருக்க வேண்டிய வைட்டமின்களில் வைட்டமின் டி3 முக்கியமானதாகும். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் கொரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க உடலில் இந்த வைட்டமின் அதிக அளவில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வைட்டமின் டி 3 உட்கொள்ளல் மற்றும் தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வைட்டமின் D3 மலிவாக கிடைக்கக் கூடியது என்பதால் பொருளாதார ரீதியாக அனைவரும் உபயோகப்படுத்துவதற்கு சாத்தியமானதாகவும் கருதப்படுகிறது.
வைட்டமின் D3-ன் முக்கியமான நன்மை என்னவென்றால் இறப்பையும், அது சார்ந்த பின்விளைவுகளை தடுப்பதுமாகும். இத்தகைய பின்விளைவுகளில் கடுமையான சுவாசக் கோளாறு முக்கியமானது. இதனை போதுமான வைட்டமின் டி3 உட்கொள்ளல் மூலம் குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
டைட்டமின் டி3-ன் வடிவங்கள்:
வைட்டமின் டி வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு முக்கியமானது. சூரிய ஒளிதான் இதன் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், வைட்டமின் டி இரண்டு வடிவங்களை கொண்டது. ஒன்று, வைட்டமின் டி2. இது தாவரங்களில் காணப்படுகிறது. மற்றொன்று வைட்டமின் டி3. இது சூரிய ஒளியில் இருந்து உடலுக்கு கிடைக்கக்கூடியது. சில விலங்கு களும் இந்த வைட்டமினை ஆதாரமாக கொண்டுள்ளன.
வைட்டமின் டி3 தரும் நன்மைகள் பின்வருமாறு:
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- வலுவான எலும்புகள் மற்றும் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- வைட்டமின் டி3 வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக அறியப்படுகிறது. இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
- இது மனநிலையை மேம்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது.
- வைட்டமின் டி3-ன் சில நன்மைகள் அதை வைட்டமின் டி2யிலிருந்து வேறுபடுத்துகிறது. குறிப்பாக டி2 உடன் ஒப்பிடும்போது டி3 உடலில் நீண்ட நேரம் தங்கியிருக்கும்.
இது உடலில் வைட்டமின் டி யின் ஒட்டுமொத்த அளவை உயர்த்துவதற்கு உதவுகிறது.
வைட்டமின் டி3 கிடைக்கும் பொருட்கள்:
முட்டை, பால், வெண்ணெய், மீன் எண்ணெய், சால்மன், டுனா, டிரவுட் போன்ற மீன் வகைகள். இவை தவிர, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தவும் டாக்டரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் டி3 மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை கொண்டிருந்தால் கொரோனா எந்த வடிவில் உருமாறினாலும் தற்காத்துக்கொள்ளலாம். எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன், சத்தான உணவை உண்பதன் மூலமும், உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துங்கள்.