• Fri. Dec 6th, 2024

உணவு உண்ட பிறகு எவற்றை சாப்பிடலாம்?

Dec 30, 2021

சைவ உணவு சாப்பிடுகிறோமா, அசைவ உணவு சாப்பிடுகிறோமா என்பதை பொறுத்துதான் பல தீனிகளை சாப்பிடலாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.

சாப்பிட்ட பிறகு வயிற்றில் சுரக்கும் அமிலங்களை கட்டுப்படுத்த வாழைப்பழம், பால், ஐஸ்க்ரீம், மில்க் ஷேக் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. பழங்கள் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். விருந்துகளில் அசைவ உணவுகளை ஒரு கை பார்ப்பவர்களுக்கும் இது நன்மை பயக்கும்.

வெற்றிலை செரிமானத்துக்கு உதவும். ஆனால், வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்து எடுத்துக்கொண்டால் குடல் கேன்சர் உருவாகவும் வாய்ப்புண்டு. இனிப்பு பீடா எடுத்துக்கொள்வது நல்லதுதான். பீடாவினுள் வைக்கப்பட்டு இருப்பது உலர வைத்த பப்பாளிதான். பீடாவுடன் பாக்கு சேர்க்காமல் சாப்பிடுவதே நல்லது.

எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, அதில் நார்ச்சத்து இருக்காது. இவ்வகை உணவுகள் மலச்சிக்கலை உருவாக்கிவிடும். பழங்களை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம். சோம்பு என்றழைக்கப்படும் பெருஞ்சீரகமும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். சாப்பிட்ட பிறகு சிலர் காபி குடிப்பார்கள். இது பசியைத் தூண்டும் அமிலங்களை சுரக்கச் செய்யும்.

மீண்டும் சாப்பிடத் தூண்டும். சாப்பிட்ட உடன் காபி, டீ குடிக்காமல் இருப்பது நல்லது. ஜல்ஜீரா சோடா, எலுமிச்சைச் சாறு போன்றவை பசியைத் தூண்டும். ஆனால், இவற்றை சாப்பிட்ட பிறகு எடுத்துக் கொண்டால் எதிர்விளைவுகளை உருவாக்கிவிடும்.

விருந்துகளுக்கு போனால் எல்லாவிதமான உணவுகளையும் ருசிக்கலாம்தான். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளை உருவாக்கி உடல்நலத்தையும் கெடுக்கும். அதனால் எவ்வளவு சுவையான, பிடித்தமான உணவாக இருந்தாலும் அளவாக சாப்பிடுவதே நல்லது.