உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விண்ணை தொட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் அதற்கு எதிர்மாறான சில விஷயங்களும் நடந்து தான் வருகிறது.
தொழில்நுட்பத்தின் மூலம் நாம் அடைந்த பலவற்றை சிறந்த முறையில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது கிடையாது. மனிதர்கள் தொழில்நுட்பத்தை கையாளும் நிலை மாறி, இன்று தொழில்நுட்பம் மனிதனை ஆளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
அதிலும் நாம் பயன்படுத்தும் செயலிகள் பெரும் பாதிப்பை நம் வாழ்க்கை முறையில் உண்டாக்கி உள்ளது . எந்நேரமும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், டிவிட்டர் போன்ற சமூக ஊடங்கங்களில் நமது பொன்னான நேரத்தை செலவிடுகிறோம்.
இதனால் மனநிலை மாற்றங்கள், உடல் ரீதியான பாதிப்புகள், குடும்ப உறவில் சிக்கல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது.
இந்நிலையில் இதுபோன்று சமூக ஊடங்கங்களுக்கு அடிமையான ஒருவர் இதில் இருந்து விடுபட வினோதமான வழி ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த மனீஷ் சேதி என்பவர் பிளாகராக (blogger) பணி புரிந்து வருகிறார். இவருக்கென ஒரு சொந்த நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இதில் அணிந்துகொள்ள கூடிய கேட்ஜெட் புராடக்ட்களை தயாரித்து வருகின்றனர். இவர் ஃபேஸ்புக்கில் அதிக அளவில் நேரம் செலவு செய்து வந்துள்ளார். இந்த போக்கு நேரடியாக அவரின் நிறுவனத்தின் வளர்ச்சியை பாதித்துள்ளது.
இதை அறிந்துகொண்ட மனீஷ் சேதி உடனே வினோதமான முயற்சியை செய்துள்ளார்.
அதாவது இவர் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதை கட்டுப்படுத்த காரா என்கிற ஒரு பெண்ணை வேலைக்கு நியமித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் இவர் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால் அப்பெண் இவரை அறைய வேண்டும். இதற்காகவே இந்த பெண்ணை வேலைக்கு சேர்த்துள்ளார் மனீஷ்.
இந்த வேலைக்காக ஒரு மணி நேரத்திற்கு 8 அமெரிக்க டாலர்களை காரா ஊதியமாக பெறுகிறார். மனீஷ் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவு செய்தால் காரா தினமும் அவரை அறைவார்.
இப்படி செய்து வருவதால் 35-40 சதவீதமாக இருந்த அவர் நிறுவனத்தின் வளர்ச்சி 98 சதவீதமாக உயர்ந்துள்ளது என குறிப்பிடுகிறார்.
இதை புகைப்படமாக எடுத்து எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் நெட்டிசன்கள் இடையில் வைரலாகி வருவதோடு, உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலன் மஸ்க் இதை பார்த்து பயர் எமோஜியை பதிவிட்டுள்ளார்.
இப்படியொரு அசுர வளர்ச்சியையும், இவரின் வினோத முயற்சியையும் கொண்ட இந்த புகைப்படத்தை தான் எலன் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
அவர் ட்வீட் செய்ததை கவனித்த மனீஷ் சற்றும் தாமதிக்காமல் அதற்கு ரீ-ட்வீட் செய்துள்ளார்.
“அந்த புகைப்படத்தில் உள்ள நபர் நான் தான். எலன் மஸ்க்கின் இந்த ட்வீட் தான் நான் அடைந்ததில் மிக பெரியது. சூரியனுக்கு மிக அருகில் ஐகாரஸ் பறப்பது போன்று உள்ளதோ? இந்த பயர் எமோஜிகளை எலன் தான் பதிவிட்டாரா? காலம் தான் பதில் சொல்லும்” என்று அவர் ரீட்வீட் செய்துள்ளார்.