இந்தியாவில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் உதவியால் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைதாகியுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் கஞ்சா சப்ளை செய்யும் கும்பல் 2 வாரத்திற்கு முன்பு பிடிபட்டது.
அமேசான் விற்பனையாளராக பதிவு செய்யப்பட்ட நிறுவனம்தான் இதற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின்போது அமேசான் தரப்பில் ஒத்துழைப்பு ஏதும் அளிக்கப்படவில்லை.
விசாரணையின் ஒரு பகுதியாக அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இந்திய இயக்குனர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காவல்துறை அளித்த தகவல்படி ரூ. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் போன்றவற்றை விற்பதாக கூறி அமேசான் இ.காமர்ஸ்நிறுவனத்துக்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது.
அதில் பங்கேற்ற நிர்வாகிகள், புல்வாமா வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தயாரிப்பதற்கு 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் மூலம் வேதி ரசாயனப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தற்போது 5 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் இருவர் விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சாவை கடத்தியுள்ளார். அந்த இருவரும் அமேசான் வர்த்தக நிறுவனத்தில் வர்த்தகர்களாக பதிவு செய்துள்ளனர்.
இதன் ஜிஎஸ்டி எண்கள் மற்றும் இதர வசதிகளை பயன்படுத்தி விசாகப்பட்டினத்தில் பெறப்பட்ட கஞ்சாவை மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்துள்ளனர்.
மேலும் கடந்த 8 மாதங்களாக இந்த குற்றச் செயல் நடந்து வருவதாக சந்தேகித்துள்ள போலீசார், 600 முதல் 700 கிலோ கஞ்சா சப்ளை செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.