• Tue. Dec 3rd, 2024

அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாள் கட்டாய வீட்டு தனிமை; இந்தியா அதிரடி

Jan 7, 2022

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது.

அத்துடன் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. இதன்படி, 1 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கை இன்று பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு பல நாடுகளில் பரவி வருகிறது. இவற்றில் இந்தியாவும் அடங்கும். இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கி உள்ளது.

இதன்படி, அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம் என மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இதேபோன்று, இந்தியாவுக்கு வருகை தரும் ஆபத்து நிலையிலான நாடுகள் பற்றிய பட்டியலை அரசு வெளியிட்டு உள்ளது.

இந்த நாடுகளை சேர்ந்த பயணிகள், இந்தியாவுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளும் பரிசோதனை உள்பட கூடுதல் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வருகிற 11 ஆம் திகதி முதல் அடுத்த உத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.