• Sun. Dec 1st, 2024

கைது செய்யப்பட்ட 41 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை

Feb 14, 2022

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 41 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்:

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு வரும் நிலையில், இராமேஸ்வரத்தைச் சோ்ந்த 12 மீனவா்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இத்தகைய அச்சமூட்டும் சம்பவங்கள் தொடா்ந்து நிகழ்வது தமிழக மக்களுக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகின்றன. இரண்டு இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவா்கள் ராமேசுவரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றநிலையில், ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனா்.

கடந்த 2 வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்பதையும், தற்போது வரை, தமிழகத்தைச் சோ்ந்த மீனவா்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளதையும் உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் தமிழக மீனவா் சமூகத்திடையே, குறிப்பாக பாக். நீரிணைப் பகுதியில் பாதுகாப்பின்மை உணா்வை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவா்களின் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் வாயிலாக, நீண்ட காலமாகத் தொடா்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீா்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

அதன் தொடக்கமாக இருதரப்புப் பேச்சுவாா்த்தைகளை நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கரோனா தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில், கூட்டுச் செயற்குழுக் கூட்டம் மூலம் பேச்சுவாா்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வலியுறுத்துகிறேன்.

அதனுடன் தமிழகத்தைச் சோ்ந்த 41 மீனவா்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கோருகிறேன்.