• Mon. Dec 2nd, 2024

அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது

Jan 8, 2022

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ”தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி உள்ளனர். குறிப்பாக பல இடங்களில் கருணாநிதியின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில் கலைஞரின் பெயரை மறைக்கும் வகையில் செடி, கொடிகளை நட்டு வைத்தனர். இராணி மேரி கல்லூரியிலும் கலைஞர் பெயர் மறைக்கப்பட்டது.

கலைஞர் ஆட்சியில் புதியதாக கட்டப்பட்ட சட்டசபை கட்டிடத்தை ஆஸ்பத்திரியாக மாற்றினார்கள். கலைஞர் கொண்டுவந்த சமத்துவபுரம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டங்களும் முடக்கப்பட்டன.

இப்படி தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்டது பற்றி பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் நாங்கள் அதுபோன்று செயல்படவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. அதனால் தான் ஜெயலலிதா நினைவிடத்தை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகிறார்கள்.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. நேற்று இந்த சபையில் பேசிய அவை முன்னவர் அம்மா உணவகத்தை மூடினால் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அதுபோன்ற எண்ணம் எனக்கு எப்போதும் ஏற்பட்டது இல்லை. எதிர்காலத்திலும் நிச்சயம் ஏற்படாது.

அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.