• Thu. Nov 21st, 2024

இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை தேடும் அதிகாரிகள்

Jul 21, 2021

தமிழகத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயரின் கல்லறையை திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலர்கள் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐரோப்பாவை சேர்ந்தவர் ஒயிட்என்னிஸ். இவர் கடந்த 1810-ம் ஆண்டு சென்னை மாகாண கலெக்டராக இருந்தவர். இவருடைய கல்லறை திண்டுக்கல்லில் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அதுகுறித்து ஆராய மதுரை ஐகோர்ட்டு கிளை திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து மாவட்டகலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் மாநகராட்சி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் கல்லறையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் பகுதியில் உள்ள காமராஜ்நகரில் கல்லறை தோட்டம் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து புதர்மண்டி கிடந்த அந்த பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது அங்கு 40-க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் பெரும்பாலானோர் ஆங்கிலேயே அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் ஆகியோரின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் ஒயிட்என்னிஸ் கல்லறை கிடைக்கவில்லை. இதனையடுத்து வேறு ஏதேனும் பகுதியில் அவரது கல்லறை உள்ளதா என்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை கல்லறை இருந்ததே தெரியாமல் அப்பகுதி மக்கள் வசித்து வந்தநிலையில் தற்போது 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையானது திண்டுக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.