அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமாகி வருகிறது.
அதிகரிக்கும் காற்று மாசுபாட்டால், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளை டெல்லி மக்கள் சந்தித்து வருகின்றனர்.
அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளினாலும், வாகனங்களில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால், தினசரி காற்றின் தரக்குறியீட்டை வெளியிட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவால், காற்று மாசு குறித்து மக்களை எச்சரித்தும் வருகிறார்.
கடந்த 10 நாட்களாக 160-க்கும் மேல் இருந்த காற்றின் தரக்குறியீடு, தசரா கொண்டாட்டத்தின் போது 300-ஐ தாண்டியது.
தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் சிலை எரிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் காற்று மேலும் மாசடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் டெல்லியில் நேற்று பெய்த கனமழையால் 298 என்ற நிலையில் இருந்த காற்றின் தரக்குறியீடு, ஒரே நாளில் 46 ஆக குறைந்தது.
மேலும் தரக்குறியீடு 50-க்கு கீழே வந்ததால், காற்றின் தன்மை நல்ல நிலையில் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.