• Mon. Jul 22nd, 2024

மும்பை பிரபல மருத்துவமனையில் 29 மாணவர்களுக்கு கொரோனா

Sep 30, 2021

மும்பை கெம் மருத்துவமனையில் மருத்துவ படிப்பு பயின்று வரும் 29 மாணவர்களுக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 23 பேர் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் என்றும், ஆறு பேர் முதலாமாண்டு மாணவர்கள் என்று மருத்துவமனையின் டீன் டாக்டர் ஹேமந்த் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதுடன் இரண்டு பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் கல்லூரியில் வைத்து நடைபெற்ற கலை நிகழ்சிகள் அல்லது விளையாட்டு நிகழ்ச்சிகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு மாணவர்கள் மட்டும் செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர்.

மராட்டிய முதல்-மந்திரி பொதுமக்களிடம், அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், பொதுமக்கள் அதை முறையாக பின்பற்றாமல் அலட்சியப் படுத்தி வருவதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மும்பையில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.