சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெண் கொரோனா நோயாளியை கொலை செய்த வழக்கில் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் பேராசிரியராக பணிபுரியும் மௌலி என்பவரது மனைவி சுமிதா கொரோனா சிகிச்சைக்காக, கடந்த மாதம் 22 ஆம் தேதி,சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையின் 3 வது மாடியில் ஆக்சிஜன் உதவியுடன் சுமிதா சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சுமிதாவை மருத்துவமனையில் விட்டுவிட்டு அவரது கணவர் மௌலி மே மாதம் 23ம் தேதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன்பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது,சுமிதா மருத்துவமனை படுக்கையில் இல்லை.
இதனை அடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் மௌலி தகவல் கொடுத்துள்ளார். அதன்பின்னர், மருத்துவமனை ஊழியர்கள் சுமிதாவை தேடித் பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சியுற்ற மௌலி அருகில் உள்ள பூக்கடை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து,பேராசிரியர் மௌலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனது மனைவியை தேட முடியாத நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து, சுமிதாவின் உடல் கடந்த ஜூன் 8 ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 8 வது மாடியில் உள்ள மின்பகிர்மான அறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
இந்நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில், நோயாளியை கொலை செய்த வழக்கில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்,செல்போன் மற்றும் பணத்திற்காக சுமிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ரதிதேவி வாக்குமூலம் அளித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.