• Sun. Oct 20th, 2024

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி உயிரிழப்பு; தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Sep 1, 2021

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு வயது 63. நலக்குறைவால் கடந்த 22ம் தேதி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவரின் மறைவுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சட்டமன்றத்தில் இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு சேகர் பாபு, ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் கூறினார்.

சென்னை தி.நகரில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.