இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விசா கட்டணம் செலுத்த தேவையில்லை என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொருளாதார இழப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் கூறுகையில்,
கொரோனா பாதிப்பிலிருந்து மீளும் வகையில், 8 பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை அறிவிக்கிறோம். இதில் நான்கு புதியவை என்றும் ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார கட்டமைப்புகளுக்காகவும் ஒதுக்கப்படுகிறது.
கொரோனாவால் பாதித்த துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
சுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், பிற துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடியும் கடன் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. மருத்துவமனைகள் உள்ளிட்ட கூட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும்.
7.95 சதவிகிதம் வட்டியில் கடன் வசதி 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். பிற துறைகளுக்கு கடனுக்கு வட்டி 8.25 சதவிகிதமாக இருக்கும்.
அத்துடன் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில், 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபின் முதலில் வரும் 5 இலட்சம் சுற்றுலா பயணிகளுக்கு அல்லது 2022 மார்ச் 31 வரை இந்த இலவச சுற்றுலா விசா வழங்கப்படும். ஒருவர் ஒரு தடவை மாத்திரமே இதனைப் பயன்படுத்த முடியும் ,
சுற்றுலா ஏஜென்சிகளுக்கு ரூ.10 லட்சமும், உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சமும் கடன் வழங்கப்படும். சர்வதேச பயணங்கள் தொடங்கியவுடன் இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் விசா கட்டணம் செலுத்த தேவையில்லை என கூறினார்.