தன்னிடம் ஆட்சியை கொடுத்தால் ஒரே இரவில் ஜேசிபி இயந்திரம் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் அகற்றி விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டும் 5,400 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன.
சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்திக்கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதனையடுத்து சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,
எதற்காக சாலை வரி வாங்குகிறீர்கள்? நான் வைத்திருக்கும் காரின் விலை ரூ.21 லட்சம், ரூ.3 லட்சம் மட்டுமே சாலை வரிக்காக செலுத்தி இருக்கிறேன்.
ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைக்க எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது? அங்கு எத்தனை ஆண்டுகள் சுங்கச்சாவடிகள் வசூலிக்கப்படும்? என்பது தொடர்பான எந்த விவரம் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், ஒரு 5 வருடம் மட்டும் ஆட்சியை என்னிடம் கொடுத்து பாருங்கள். புல்டோசர் மூலம் ஒரே இரவில் தமிழகத்தின் சுங்கச்சாவடிகளை அகற்றிவிடுவேன்.
என் மாநில சாலையை நான் பராமரித்து கொள்கிறேன் என்று சொல்வதற்கு இங்கு ஆள் இல்லை. இதுதான் இங்கு பிரச்சினையே என சீமான் கூறியுள்ளார்.