• Thu. Nov 21st, 2024

சீனாவால் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள்!

Jul 12, 2021

சீனாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் சுமார் 21 ஆயிரம் பேர் எம்.பி.பி.எஸ். படிக்கும் மருத்துவ மாணவர்கள் ஆவார்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியதை தொடர்ந்து, இந்திய மாணவர்கள் அவசர அவசரமாக நாடு திரும்பினார்கள்.

ஆனால் இந்தியாவில் கொரோனா தனது கோரப்பிடியை இறுக்கியதன் காரணமாகவும், சீனா விதித்துள்ள பயண கட்டுப்பாடுகளாலும் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் ஆகியும் மாணவர்கள் சீனா செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வந்தாலும் நடைமுறை வகுப்புகளுக்கு அணுகல் இல்லாதது மருத்துவ கல்வியாளர்களான தங்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பெரிய கேள்வி குறியாக்கி இருப்பதாக மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலரும் கூறுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து இருப்பதால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதிலும் சில சிக்கல்கள் இருப்பதாக மருத்துவ மாணவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், “சீனாவில் இந்திய மாணவர்கள்” என்கிற குழுவை அமைத்து இந்தியா மற்றும் சீனா அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக சமூக வலைத்தளங்கள் வாயிலாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட கோரி பிரதமர் மோடியையும் அணுகியுள்ளனர்.