இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்பாராத வானிலையே காரணம் என விசாரணைக் குழு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த மாதம் 8ஆம் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து விபத்து தொடர்பாக ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படைகளின் விசாரணை நடத்தப்பட்டது.
இதனை அடுத்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் முதற்கட்ட விவரங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்பாராத வானிலை மாற்றம் காரணமாக மேகக் கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.