• Fri. Jul 26th, 2024

பாகிஸ்தான் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுவிட்டது – இந்தியா

Jul 23, 2021

“ஆப்கானிஸ்தான் துாதரின் மகள் கடத்தப்பட்டதற்கு மறுப்பு தெரிவித்து, மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு பாகிஸ்தான் சென்றுவிட்டது,” என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி சாடி உள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் துாதராக பணியாற்றி வருபவர் நஜிபுல்லா அலிகில். தலைநகர் இஸ்லாமாபாதில் வசித்து வரும் இவரது மகள் சில்சிலா அலிகில், 26, சமீபத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

அவர்கள் சில்சிலாவை பல மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து சித்ரவதை செய்தபின் விடுவித்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள துாதர் மற்றும் மூத்த துாதரக அதிகாரிகள் அனைவரையும் நாடு திரும்ப, ஆப்கானிஸ்தான் அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் துாதரின் மகள் கடத்தப்பட்டதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், உலக அரங்கில் பாகிஸ்தானின் மதிப்பை சீர்குலைக்க, இந்தியா முயற்சிக்கப்பதாகவும், பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று கூறியதாவது:

“பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் துாதரின் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. எனினும் இந்த விவகாரத்தில் இந்தியாவை, பாகிஸ்தான் அரசு இழுத்துள்ளது. எனவே, அதற்கு பதிலளிக்க இந்தியா கடமைப்பட்டுள்ளது. துாதரின் மகள் கடத்தப்பட்டதற்கு மறுப்பு தெரிவித்து மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு பாகிஸ்தான் சென்றுவிட்டது” இவ்வாறு அவர் கூறினார்.