
மத்திய பிரதேச மாநிலத்தில் தப்தி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள நகரம் பர்ஹான்பூர். இந்த அழகிய நகருக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
யாருமே நினைத்து பார்க்க முடியாத வகையில், தன்னுடைய அன்பான மனைவிக்காக தாஜ்மஹால் போன்ற அமைப்பில் ஒரு புதிய வீட்டைக் கட்டி பரிசாக கொடுத்துள்ளார் ஒரு பாசக்கார கணவர்.
ஆனந்த் பிரகாஷ் சோக்சே எனும் அந்த நபர் பர்ஹான்பூரில் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மஞ்சுஷா சோக்சேவுக்காக தாஜ்மஹால் போன்ற அமைப்பில் ஒரு புதிய வீட்டை கட்டியுள்ளார்.
‘அன்பு, சமுதாய ஒற்றுமை மற்றும் பர்ஹான்பூரின் பெருமை’ ஆகியவற்றை உலக மக்களுக்கு கொண்டு செல்வதற்காக தான் இந்த மினி தாஜ்மஹாலை கட்டியுள்ளதாக அவர் கூறி உள்ளார்.
முகலாய பேரரசர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் புர்ஹான்பூரில் இறந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், தாஜ்மஹால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. அதனால் தன்னுடைய மனைவிக்கு தாஜ்மஹால் போன்ற வீட்டை கட்டி பரிசளிக்க ஆனந்த் சோக்சே முடிவு செய்தார்.
இதனையடுத்து 3 ஆண்டுகளாக இந்த வீட்டின கட்டுமானப் பணி நடைபெற்றது. இந்த வீட்டில் நான்கு படுக்கை அறைகள், தியான அறை, நூலகம் உள்ளிட்ட வசதிகள் அமைந்துள்ளன.
இந்த அழகிய வீடு இரவில் மின்னொளியில் ஜொலிக்கிறது, காண்போரை கண்கவரச் செய்துள்ளது.
பல்வேறு நிபுணர்கள் இணைந்து இந்த தாஜ்மஹால் வீட்டைக் கட்டி எழுப்பியுள்ளனர். ராஜஸ்தான் மார்பிள் கற்களைக் கொண்டு தரைத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹாலில் உள்ளது போலவே கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.