• Fri. Nov 22nd, 2024

விஜய் மல்லையாவிற்கான தீர்ப்பு ஜனவரியில் அறிக்கப்படும்

Dec 1, 2021

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கான தண்டனை விபரம், எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய்மல்லையா. இவர் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் இங்கிருக்கும் வங்கிகளில் கடன் பெற்று, அதன் பின் அதை செலுத்த முடியாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.

இவர், ஐரோப்பிய நாடான பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு டியாஜியோ நிறுவனத்திடம் பெற்ற 2.80 கோடி ரூபாயை தன் மகன் சித்தார்த் மற்றும் மகள்களுக்கு வழங்கி உள்ளார்.

இது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்பதால், விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கில் மல்லையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டதால், அவருக்கான தண்டனை மீதான விசாரணை மட்டும் இன்னும் முடியவில்லை.

நீதிமன்றத்தில் மல்லையா ஆஜராக போதிய அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. இனியும் காத்திருக்க முடியாது.

இதனால், மல்லையாவுக்கு வழங்கப்படும் தண்டனை மீதான விசாரணை, வரும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்டு,18-ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.