2015 ஆம் ஆண்டு திவிநெகும திணைக்களத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கடுவெல நீதவான் நீதிமன்றம், இன்று கட்டளையிட்டது.
குறித்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்ட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
திவிநெகும திணைக்களத்தின் திவிநெகும சமூக அடிப்படையிலான வங்கியின் நிதியில் இருந்து சமுர்த்தி பெறுபவர்களுக்கு நட்டஈடு மற்றும் கருணைத்தொகையை வழங்கியதாக அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் நட்டஈடு மற்றும் கருணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.