இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் 4,740 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரண(NCBA) தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“சிறுவர்களை ஆபத்தான முறையில் வேலைக்குப் பயன்படுத்தும் பிரமுகர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனடிப்படையில் சிறுவர்கள் கொடுமைக்குள்ளாக்கப்படும் வகையிலான, பாதுகாப்பற்ற வேலைகளின் எண்ணிக்கையை 76 ஆக அதிகரிப்பதற்குத் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இரு மாதங்களுக்குள் இதனை ஒரு சட்டமாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
கடந்த மாதத்தில் குழந்தைகளுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன எனவும், சிறுவர்களை வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புக்களை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.