• Sun. Jan 5th, 2025 9:15:59 PM

அந்தமான் அருகில் புதிய தாழமுக்கம்! இலங்கைக்கு எச்சரிக்கை

Nov 12, 2021

தெற்கு அந்தமான் கடற்பரப்புக்கு அருகில் நாளைய தினம் தாழமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகுவதனால் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் இது தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.
அத்துடன் வடமத்திய மாகாணத்தில் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேலும் நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.