• Mon. Mar 25th, 2024

இலங்கையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கவனம்

Jul 3, 2021

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என்பதால் , சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய ஆரம்பகட்டமாக 100 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை இம்மாதத்திற்குள் திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் , ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இலங்கையில் 50 ஐ விட குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட 1439 பாடசாலைகளும் , 51 – 100 மாணவர்களைக் கொண்ட 1523 பாடசாலைகளும் என 2962 பாடசாலைகளை சுகாதார வழிமுறைகளுக்கமைய ஆரம்பகட்டமாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அதற்கமைய குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டால் , பெற்றோர் தமது பிள்ளைகளை அச்சமின்றி பாடசாலைக்கு அனுப்பப் கூடியவாறு நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.

இணையவழி கல்வி செயற்பாடுகளில் ஈடுபட முடியாத 30 514 பாடசாலைகள் கல்வி அமைச்சினால் அடையாளங் காணப்பட்டுள்ளன. அவை மொத்த பாடசாலைகளில் 6 சதவீதமாகும். அதே போன்று தொழிநுட்ப வசதியற்ற பாடசாலைகளுக்கு அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான 2096 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்ட தலைவர்கள் , வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களால் குறித்த மத்திய நிலையங்களை இனங்காணப்பட்டுள்ளதோடு , இம்மாதம் 5 ஆம் திகதி அவற்றை திறப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.