• Sun. Oct 20th, 2024

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பது குறித்து இன்று தீர்மானம்

Sep 3, 2021

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 06ஆம் திகதிக்குப் பின்னர் தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது இன்று (03) தீர்மானிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்று (03) கூட உள்ளது.

அந்தச் செயலணி, நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளன.

இன்று(03) நடைபெறும் ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் குழுவின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த முறை கூடி இருந்த ஜனாதிபதி செயலணி, 06ஆம் திகதி வரையில் நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுகாதார நிபுணர்கள் பலரும், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே ஆகியோரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பல்வேறான அழுத்தங்களுக்குப் பின்னர், ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் செப்டெம்பர் 6ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.