உலகின் வறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ‘ஜி-7’ நாடுகள் நன்கொடையாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு ‘ஜி-7’ என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் உச்சி மாநாடு, இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே ஹோட்டலில் நேற்று(11) ஆரம்பமானது.
முன்னதாக உலக மக்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுமாறு உலகத்தலைவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்தார்.
இதனையொட்டி நேற்று(11) போரிஸ் ஜோன்சன் தரப்பில் அறிக்கை ஒன்றுவெளியிடப்பட்டது.
அதில் ”உலகின் வறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான அறிவிப்பை உலகத்தலைவர்கள் வெளியிடுவார்கள். டோஸ் பகிர்வு, நிதி உதவி அளித்தல் வாயிலாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும். கொரோனா தொற்றுநோயை தோற்கடிப்பதற்கு ஒரு பெரும் உதவியாக இது அமையும்” என்று கூறப்பட்டுள்ளது.