• Thu. Nov 21st, 2024

தலிபான்களின் கொண்டாட்டத்தில் பரிதாபமாக பலியான 17 பேர்!

Sep 4, 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளதை கொண்டாடும் விதமாக தலிபான் படையினர் சிலர் துப்பாக்கியால் சுட்டதி ல் 17 மக்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து தலிபான்களின் முதன்மை செய்தித் தொடர்பாளரான சபிஹுல்லா, ‘காற்றில் சுடுவதைத் தவிர்த்து, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

உங்கள் கைகளில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளன. அவற்றை வீணாக்க யாருக்கும் உரிமை இல்லை.

துப்பாக்கித் தோட்டாக்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.எனவே தேவையில்லாமல் சுட வேண்டாம்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட தலிபான் அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் மேற்குலக ஆதரவுடன் ஆட்சி செய்துகொண்டிருந்த முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் அரசை வீழ்த்தி, நாட்டை கைப்பற்றினர்.

கடந்த ஆட்சிக் காலத்தைப் போல அல்லாமல், தற்போதைய ஆட்சி வேறு வகையில் இருக்கும் என நாட்டைக் கட்டுப்படுத்தியவுடன் அறிவித்தனர்.

கடந்த தலிபான்களின் ஆட்சிக் காலத்தில், பெண்களுக்குக் கல்வி தடை செய்யப்பட்டது.

மேலும், ஆண் துணையின்றி, பெண்கள் வீதிகளில் நடமாடவும் தடை செய்யப்பட்டது.

இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டன. தலிபான்கள் காபூல் விமான நிலையத்தைக் கைபற்றிய போது, அதனைக் கொண்டாட விளையாட்டாகத் துப்பாக்கிகள் சுடப்பட்டன.

தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லாஹ் முஜாஹித்,

‘உலகம் தற்போது பாடம் கற்றிருக்கும். இது கொண்டாடத்தக்க வெற்றி’ என்று லைவ் ஸ்ட்ரீம் ஒன்றில் தெரிவித்துள்ளார். முஜாஹித் விமான நிலையத்தில் கூடியிருந்த தனது படையினரிடம், “நாட்டு விவகாரங்களை அணுகும் போது, எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், நமது நாடு ஏற்கனவே போரையும், படையெடுப்புகளையும் அதிகமாகப் பார்த்துவிட்டது. நம் மக்களால் இனியும் சகித்துக் கொள்ள முடியாது” என்றும் அவர் கூறினார்.