• Fri. Jul 26th, 2024

அடுத்த உலகளாவிய தொற்றுநோய் குறித்த அறிவிப்பு

Apr 1, 2022

பூச்சிகளால் பரவும் வைரஸ்கள் அடுத்த உலகளாவிய தொற்றுநோயாக இருக்கலாம் என உலக சுகாதார தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜிகா, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்றவை கொசுக்கள் மற்றும் உண்ணிகள் போன்றவற்றால் பரவும்.

இவைகளே அடுத்த சாத்தியமான பெருந்தொற்றை ஏற்படுத்தக் கூடும் எனவும், இதனால், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வசிக்கும் கிட்டத்தட்ட நான்கு பில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, கொரோனா பெருந்தொற்று போன்ற ஒரு மோசமான நிலை மீண்டும் ஏற்படாதவகையில் ஒரு தடுப்பு திட்டத்தை வகுக்க நிபுணர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

2003ல் சார்ஸ் மற்றும் 2009ல் குளிர் காய்ச்சல் பரவல் ஏற்பட்டும், அந்த பாடங்களை கற்றுக்கொள்ள தவறியதாலே, தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் நாம் முடக்கப்பட்டுள்ளோம் என தெரிவிக்கும் நிபுணர்கள், அவ்வாறான சூழல் ஏற்படாமல் இருக்க, தற்போதே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கொசுக்கள் மற்றும் உண்ணிகளாலையே, அடுத்த பெருந்தொற்று என்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் சிக்கல் அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

கொசுக்கள் மற்றும் உண்ணிகளால் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு முதலே 89 க்கும் மேற்பட்ட நாடுகள் Zika பரவலை எதிர்கொண்டுள்ளன, அதே நேரத்தில் மஞ்சள் காய்ச்சல் ஆபத்து 2000 களின் முற்பகுதியில் இருந்து அதிகரித்து வருகிறது.

மட்டுமின்றி, டெங்கு காய்ச்சலால் ஒவ்வொரு ஆண்டும், 130 நாடுகளில் 390 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தற்போது, நிபுணர்கள் தரப்பு இடர் கண்காணிப்பு, தொற்றுநோய் தடுப்பு, தயார்நிலை, கண்டறிதல் மற்றும் பதிலளிப்பதில் தங்கள் தரவுகளை திரட்டி வருவதாக ஐ.நா. சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.