• Thu. Nov 21st, 2024

காசிம் சுலைமானியின் கொலைக்கு பழி தீர்க்க வந்த ஆளில்லா விமானங்கள்!

Jan 4, 2022

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தை நோக்கி ஆயுதங்களுடன் வந்த இரண்டு ஆளில்லா விமானங்கள், சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்களின் முகாமை நோக்கி தாக்குதல் நடத்த இந்த இரண்டு ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்டதாக கூறிய அமெரிக்கா, இந்த ஆளில்லா விமானங்களை இடைமறி ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு கண்காணித்து அழித்துவிட்டதாகவும் அமெரிக்க கூட்டு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் கூட்டு பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு இல்லை. எனினும், பொதுமக்கள் பயன்படுத்தும் விமான நிலையம் மீது நடத்தப்பட இருந்த இந்தத் தாக்குதல் மிகவும் அபாயகரமானது.

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானங்களின் இறக்கைகளில் சுலைமானியாவுக்கு பழிதீர்ப்பு போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான இராக்கின் தாக்குதலுக்கு ஆதரவு அளித்து வந்த அமெரிக்கா, கடந்த மாதத்துடன் அந்த ஆதரவை நிறுத்திக் கொண்டது.

எனினும், 2,500க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவத்தினருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தலைநகர் பாக்தாத்தில் முகாமிட்டுள்ளனர்.

ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியாவை பாக்தாத் விமான நிலையம் அருகே 2020இல் அமெரிக்கா ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் கொன்றமை குறிப்பிடத்தக்கது.