‘ஆண்டி வைரஸ்’ எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியான ‘மெக்காஃபே’ நிறுவனர் ஜான் மெக்காஃபே தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.
75 வயதான மெக்கஃபே, 2014லிருந்து 2018 வரை நான்கு ஆண்டுகள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதனையடுத்து 2020 அக்டோபரில் ஸ்பெயினின் பார்சிலோனா விமான நிலையத்தில் அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பார்சிலோனா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என கோரப்பட்டிருந்தது. அமெரிக்காவின் இந்த கோரிக்கையை ஏற்று ஸ்பெயின் தேசிய நீதிமன்றம் மெக்கஃபேவை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதியளித்திருந்தது.
வரி ஏய்ப்பு குற்றம் ஒருவேளை நிரூபிக்கப்பட்டால் மெக்கஃபே அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகள் வரை சிறைதண்டனையை அனுபவிக்க நேரிடும். இந்த சூழலில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் மெக்கஃபே சிறையில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. இதனை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2014லிருந்து 2018க்கு இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் மெக்கஃபே 12 மில்லியன் டாலர்களை வருமானம் ஈட்டியிருந்ததாகவும் ஆனால், வரியை முறையாக செலுத்தவில்லை என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.