• Wed. Apr 24th, 2024

ஐவரி கோஸ்ட்டின் முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை

Jun 24, 2021

ஐவரி கோஸ்ட்டின் முன்னாள் பிரதமர் கியம் சோரா 2019ல் அந்நாட்டு அதிபருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்படுள்ளது.

ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ளது ஐவரி கோஸ்ட் நாடு. இங்கு மூன்றாவது முறையாக அலசன் வட்டாரா அதிபராக உள்ளார். அவருக்கு கீழ் பிரதமராகவும், சபாநாயகராகவும் பணியாற்றியவர் கியம் சோரா.

கடந்த 2010ல் நடந்த அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் லாரன் பேக்போ, அலசனிடம் தோற்ற பின்னரும் பதவி விலகாமல் இருந்தார்.

சோரா கிளர்ச்சியாளர்களுக்கு தலைமை தாங்கி உள்நாட்டு போரின் மூலம் லாரனை பதவி விலகச் செய்து, அலசனை ஆட்சிக்கு கொண்டு வந்தார். கடந்த 2019ல் சோரோவே அதிபராக விரும்பினார். இதனால் அதிபர் அலசன் வட்டாரா உடனான நட்பு முறிந்தது.

தொடர்ந்து அதிபருக்கு எதிராக சதி செய்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. ராணுவ கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம்சாட்டி சோரா ஐரோப்பாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 2020 அதிபர் தேர்தலில் அவருக்கு போட்டியிட தடை விதித்தனர். அந்த சர்ச்சைக்குரிய தேர்தலில் 3வது முறையாக அலசன் வட்டாரா வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

தற்போது சோராவுக்கு எதிரான வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரது சகோதரர்களுக்கு 17 மாதங்களும், அவருக்கு நெருக்கமான இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சோரா மற்றும் அவருடன் வழக்கில் தொடர்புடைய 19 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், அவரது இயக்கத்தை கலைப்பதற்கும் உத்தரவிட்டது.

மேலும் 18 கோடி டாலர் அரசுக்கு செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில் இத்தீர்ப்பினால் ஐவரி கோஸ்டில் பதற்றம் நிலவுகிறது.