இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் ரமீஸ் ராஜா கூறியதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், கிரிக்கெட் உலகம் என்ற பொம்மலாட்ட நூல் இந்தியாவின் கையில் உள்ளது, பணபலம் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நியூசிலாந்து அணி, ‘கொஞ்சம் இருங்க இந்த முக்கு வரைக்கும் போயிட்டு வந்துடறோம்னு’ சொல்லி ஊரைப்பார்க்கச் சென்றனர்,
இங்கிலாந்தும் பயந்து போய் நாங்க வரலைப்பா என்று ஒதுங்கிக் கொண்டனர், நியூசிலாந்து பாதியிலேயே ஒடிப்போனதற்குக் காரணம் இந்தியா கிளப்பி விட்ட பீதிதான் என்று பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் கிரிக்கெட் தலைகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உலக கிரிக்கெட்டின் நிதியாதாரப் பிடி இந்தியா கையில் உள்ளது, எனவே கிரிக்கெட்டை அவர்கள் ஆட்டிப்படைக்கின்றனர் என்று சாடியுள்ளார்.
மிடில் ஈஸ்ட் ஐ என்ற ஊடகத்திற்கு இம்ரான் அளித்த பேட்டியில், “இங்கிலாந்து தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டனர்.
அதாவது பாகிஸ்தானுடன் ஆடுவதன் மூலம் இந்த நாட்டுக்கு ஏதோ பெரிய சாதகம் செய்து விடும் நினைப்பில்தான் இங்கிலாந்து போன்ற நாடுகள் இன்னமும் கருதுகின்றன. இதற்கு ஒரு காரணம் பணம்.
பணம்தான் கிரிக்கெட்டை ஆள்கிறது, பணத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆள்கிறது, அதனால் உலக கிரிக்கெட்டை இந்தியா ஆள்கிறது, இதுதான் விஷயம்.
எனவே பாகிஸ்தானை செய்வது போல் இந்தியாவைச் செய்ய இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு துணிச்சல் இருக்கிறதா என்றால் இல்லை. காரணம் பணம். இந்தியா நிறைய பணம் சம்பாதித்து கொடுக்கிறது.
இங்கிலாந்து தொடரை ரத்து செய்வதன் பின்னணியும் பணம்தான் அதனால்தான் கூறுகிறேன் இங்கிலாந்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு விட்டது என இம்ரான் கான் கூறினார்.