சீனாவில் தோன்றிய உயிர் கொல்லி வைரசான கொரோனாவால் உலகிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்காதான். இன்றளவும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அந்த நாடு தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி கடந்த பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பானது 2 லட்சம் வரை இருந்து வந்தது. தினசரி உயிரிழப்பும் ஆயிரக்கணக்கில் இருந்தது.
இந்த சூழலில் ஜனவரியில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தினார். இதன் பலனாக அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைய தொடங்கியது. ஜூன், ஜூலை காலக்கட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்து வந்தது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1 லட்சத்து 32 ஆயிரத்து 822 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ ஏற்கனவே அமெரிக்காவில் கால்பதித்து விட்டது. அதோடு அது வேகமாகவும் பரவி வருகிறது.
இந்த வைரஸ் அமெரிக்காவில் நுழைவதற்கு முன்பு, அது குறித்து நாட்டு மக்களிடம் பேசியபோது ஒமைக்ரான் வைரசை கண்டு அஞ்ச வேண்டாம், அதோடு அதற்காக ஊரடங்கை விதிப்பதோ அல்லது பயண கட்டுப்பாடுகளை நீட்டிப்பதோ அவசியம் இல்லை எனவும் ஜோ பைடன் கூறினார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதை தொடர்ந்து, ஜனாதிபதி ஜோ பைடன் பயண கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உத்தரவு பிறப்பித்தார். அதோடு முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைளையும் தீவிரமாக கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
புதிய விதிமுறைகளின் படி வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட அமெரிக்கா புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.