ரஷியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 1,015 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், ரஷியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையிலும் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாததே ரஷியாவில் வைரஸ் பரவல் அதிகரிக்க காரணம் என மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரஷியாவில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்ததாத 60 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூகப்பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
ரஷியா முழுவதற்கும் அக்டோபர் 30லிருந்து நவம்பர் 7ம் தேதி வரை ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்படுகிறது.
ரஷியர்கள் பொறுப்பை உணர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.