சீனாவின் உய்குர் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி கனடாவில் போராட்டம் இடம்பெற்றுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஒட்டாவா அலுவலகத்திற்கு முன்பதாக இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் வரையில் கலந்துக்கொண்டிருந்தனர்.
மேலும் உய்குர் இனத்தவர்களுக்கு எதிரான சீனாவின் இனஅழிப்பை கண்டிப்பதுடன் அந்த மக்களின் பாதுகாப்பை வலியுறுத்துமாறும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்தும் 15 நாட்டுகளுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது உய்குர் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மனித உரிமைகள் அமைப்பினர் கைச்சாத்திட்ட மகஜர் ஒன்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஒட்டாவா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்தல் மற்றும் உய்குர்கள் மக்களுக்கு எதிரான சீனாவின் இன அழிப்பு எதிராக சர்வதேச அரங்கில் செயற்படுதல் போன்ற விடயங்கள் குறித்த கூட்டுக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
”சீனா செய்யும் அநீதிகளை கனேடியர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றே நாங்கள் இங்கு வந்துள்ளோம். அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். கனடாவுக்கு ஒரு தார்மீகக் கடமை மட்டுமல்ல , இனப்படுகொலையை நிறுத்த சட்டபூர்வமான கடமையும் உள்ளது” என ஆர்பாட்டக்காரர் ஒருவர் இதன் போது தெரிவித்தார்.
சீனாவின் இனப்படுகொலையை அங்கீகரிக்க செனட் சபையில் செனட் உறுப்பினர் லியோ ஹவுசகோஸ் முன்வைத்த மசோதாவுக்கு எதிராக 33 கனேடிய செனட் உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனை கண்டிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கனேடியர்கள் என்ற வகையில், கடந்த காலங்களில் கனடா பழங்குடி மக்களிடம் தவறாக நடந்து கொண்டதால், இந்த வகையான இனப்படுகொலைச் செயல்கள் மீண்டும் எங்கும் நடக்க அனுமதிக்கக் கூடாது என்பதில் கனடா இந்த உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட கடமைப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினர்.